
தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரபு மொழி வீதிகளுக்கும், பதாதைகளுக்கும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தெஹிவளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையானார்.
இதன்போது அங்கு சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், “அரபு மத்ரசாக்களின் கல்வி நடவடிக்கைகள் அரபு மொழியில் இடம்பெறவேண்டும். குர்-ஆன் அரபு மொழியில் இருப்பதால் அரபு கற்பது தேவையாக இருக்கின்றது.
எனினும் வீதிகள் மற்றும் பதாதைகளில் அரபு மொழி இருப்பது தேவையற்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதே போதுமானது” எனத் தெரிவித்தார்.
இதன்போது, இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர்,
“தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதியுடன் கதைத்தேன். குறித்த நபரை தாம் கைது செய்யவில்லை என இராணுவத் தளபதி கூறவில்லை. மாறாக தேடிப் பார்த்துக் கூறுவதாக தெரிவித்தார்.
இதனால் அவருக்கு மூன்று தடவைகள் அழைப்பினை ஏற்படுத்த வேண்டியேற்பட்டது. அவர் கைது செய்யவில்லை என்று கூறியிருந்தால் அவருக்கு அழைப்பை ஏற்படுத்தியிருக்க மாட்டேன்.
மூன்று நாளைக்கு பின்னரே இராணுவத் தளபதி எனக்கு பதில் வழங்கினார். கைதுசெய்யப்பட்டவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். நான் அந்த நபர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இராணுவத் தளபதிக்கு அழைத்தேன்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, சதொச வாகனங்களை பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போது,
“சதொச வாகனங்களை நான் பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்தியதாக ஊடகங்களில் கூறிய எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.
உண்மையில் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும். ஆகவே அவர்கள் முறைப்பாடு செய்யவில்லை என்பதால் நான் அவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தேன்.
ஒக்டோபர் ஆட்சி மாற்றத்தின் போது என்னை அந்தப் பக்கம் வருமாறு அடிக்கடி தொல்லை தந்தவர்களே, இவ்வாறு என் மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனிடையே, நான் அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னரே சதொச வாகனங்களுக்கு ஜீ.பி.ஸ். பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்தேன்” என்று குறிப்பிட்டார்.
