
பூர்வீக நிலங்கள் பல்வேறு பெயர்களினால் சூறையாடப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், வனவளத் திணைக்களத்தின் காணி கையகப்படுத்தல் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “காணி மீட்டல் என்பது யாரிடமிருந்து யார் காணியை மீட்பது என்ற கேள்வியை வடக்கு கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு கேட்க வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு விதமான அதிகார சபைகளால், திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் காணிகளை மீட்டல் தொடர்பான ஒரு விவாதத்தை இங்கு முன்வைக்க வேண்டியுள்ளது. பல கோணங்களில் ஆராய்கின்றபோது முதலாவதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு காணி மீட்டல் ஒரு சர்வதேச புகழ்பெற்ற போராட்டமாக பரிணமித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக, அந்தக் காணிகளுக்கு உரிய ஆவணங்களை மக்கள் வைத்துக்கொண்டு இராணுவத்திடம் இருந்து தமது காணிகளை மீட்கப் போராடி வருகின்றனர். இந்தக்காணி மீட்டல் இதற்கு பொறுப்பானதாக அமைய வேண்டும். இது குறித்து ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீட்டல் தொடர்பாகவும் இங்கு கூற வேண்டியுள்ளது. மகாவலி எல் வலய அபிவிருத்தி என்ற போர்வையில் யுத்த காலத்தில் கள்ளத்தனமாக, கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த அந்த காணிகளை கையகப்படுத்தி மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகளை மீட்டெடுக்க வேண்டிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
