ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதற்கு கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்த அறிவிப்பினை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு கோரியமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் ஜூலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அரசாங்கத்தின் பாதுகாப்பு பலவீனங்கள் மற்றும் பொறுப்பற்ற தன்மைகள் காரணமென குற்றம்சாட்டி மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடிவு செய்தது.
அந்தவகையில் குறித்த பிரேரணை ஜே.வி.பியினர் சார்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மே மாதம் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பிரேரணையை ஜூலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதிக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்து்ள்ளனர் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.





