
முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் பதவியேற்குமாறு பல தரப்பினரிடமிருந்மு முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்ர தெரிவிக்கையில், “நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும்.
அத்துடன், குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதுடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.
அதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.
அத்துடன் அபாயாவுக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் சுற்று நிருபத்தை இரத்துசெய்ய வேண்டும் என்றும் வெறுப்பூட்டும் வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன் அமைச்சுப் பதவிகளில் விலகிய அனைவரும் யாரையும் பாதுகாப்பதற்கோ சுயலாபத்துக்கோ பதவி விலகவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே பதவி விலகத் தீர்மானித்தோம். அதனால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
