ஹிந்தி மொழியை பாடத்திட்டங்களில் திணிக்கும் மும்மொழித் திட்ட முயற்சியை மத்திய அரசு கனவிலும் நினைக்கக் கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அவர், இந்த பரிந்துரையை மத்திய அரசு உடன் நிராகரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் கூறியிருப்பதாவது,
“மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. ஹிந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு வரலாறுகளை ஆராய்ந்ததாகவோ, அடிப்படை நோக்கங்களை புரிந்ததாகவோ தெரியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்ற முயற்சிப்பது தேன்கூட்டில் கல் வீசுவது போன்றது. இருமொழிக் கொள்கை என்ற தேன் கூட்டில் கல்லெறிய வேண்டாம். மும்மொழிக் கொள்கையை பா.ஜ.க. அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது. மும்மொழிக் கொள்ளையை அமுல்படுத்துவது பேரிடரை ஏற்படுத்தி விடும்.
மும்மொழிக் கொள்கைக்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். அன்னைத் தமிழின் பெருமையை சீர்குலைக்கும் எந்தவித பரிந்துரைகளையும் தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது” எனத் தெரிவித்தார்.





