
பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரட்ன கோரியுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.பி.செனவிரத்னவிடம் அவர் கேட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் நாளை பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்.
இதனிடையே, வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றன. இதன்போது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடை விவகாரம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை சாட்சிகள் முறையாக வெளிப்படுத்தவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றில் அறிவித்திருந்தது.
அத்துடன், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத, அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதான குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது என விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் சி.ஐ.டி. நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில், வைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அத்துரலிய தேரரினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அறிக்கையை தருமாறு பதில் பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
