
டிஃபானி ஆடம்ஸ் என்ற பெண்மணி கடந்த மாதம் ஏர் கனடா விமானத்தில் கியூபெக் சிட்டியில் இருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வரை பயணம் செய்துள்ளார்.
வெறும் 90 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தினிடையே, டிஃபானி அயர்ந்து தூங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த விமானத்தில் நடந்த சம்பவமானது தமக்கு கவலை மற்றும் தூக்கமின்மையை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஃபானியின் இந்த அதிரவைக்கும் அனுபவத்தை அவரது தோழி ஒருவர் ஏர் கனடாவின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்று அந்த விமானத்தில் பயணிகள் மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்துள்ளன.
இதனிடையே டிஃபானி ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்துள்ளார். திடீரென்று கண்விழித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குறித்த விமானத்தில் அப்போது அவர் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இறங்கிய அவர் விமானிகளின் இருக்கைக்கு சென்று ஒரு பிளாஷ் லைட் ஒன்றை எடுத்துள்ளார்.
அதன் வெளிச்சத்தில் முக்கிய கதவு வழியாக வெளியேற முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்து தரையில் சென்று சேர படிகள் இல்லை.
சுமார் 40 முதல் 50 அடி உயரத்தில் இருந்து குதிப்பது ஒன்றே வழி என கருதி இருந்த நிலையில், வேறு எவரேனும் உதவிக்கு வருவார்களா என அந்த பிளாஷ் லைட் வைத்து முயற்சித்துள்ளார்.
இவரது முயற்சி வீண்போகவில்லை. நிறுத்தப்பட்டிருந்த விமானத்தினுள் இருந்து வெளிச்சம் ஒன்று நடமாடுவதை தொலைவில் இருந்து பார்த்த ஊழியர் ஒருவர், டிஃபானியின் உதவிக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து ஏர் கனடா ஊழியர்களால் அவரது குடியிருப்புக்கு வாகனம் ஒன்றில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் டிஃபானி. மட்டுமின்றி, ஏர் கனடா நிர்வாகிகள் டிஃபானிக்கு தொலைபேசியில் அழைத்து மன்னிப்பும் கோரியுள்ளனர்.
மேலும், விமானத்தில் டிஃபானி மட்டும் தனியாக சிக்கியது எப்படி என்பது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
