
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு புரிதல் கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே தெரிவித்துள்ளார்.
19 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டமையினால்தான் 18 இல் இருந்த அனைத்து தீங்கு விளைவிக்கும் உட்பிரிவுகளும் இரத்து செய்ய முடிந்தது என்றும் அவர் கூறினார்.
நாவலபிட்டியவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹேஷ விதானகே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதிக்கு அவரது ஆலோசகர்களால் தெளிவூட்டப்படவில்லை.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர் அளித்த உறுதிமொழிகளை ஜனாதிபதி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஜனாதிபதி சிறிசேனவின் வேண்டுகோளின்படியே 19 வது திருத்தம் இயற்றப்பட்டது.
19 வது திருத்தத்தை கொண்டுவருவது என்ற உறுதிமொழியின் பிரகாரம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவதனால் 6.2 மில்லியன் வாக்காளர்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
அத்தகைய அறிக்கைகள் மூலம் ஜனாதிபதி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்றே கருத முடியும்” என கூறினார்.
