
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டொக்டர் குமாரதாஸ் மறைவிற்கு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
1984ல் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராக முதன் முதலில் வெற்றி பெற்ற அவர் தொகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மட்டுமின்றி – நான்கு முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொண்டாற்றியவர்.
சட்டமன்றத்தில் திறமையான வாதங்களை முன் வைத்து- தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தன் தொகுதிக்கு தேவையான திட்டங்களைப் பெற்றவர்.
கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியவர். மக்கள் செல்வாக்குள்ள திரு குமாரதாஸ் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
