
மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத் திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காத வகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் பொதுமக்கள் மற்றும் தாய்மாரின் கட்சியாக கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்டும் செயற்பாடுகளின்போது பெண் பிரதிநிதிகளுக்கு விசேட கடமைகள் வழங்கப்படுவதுடன், நிகழ்கால சமூக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நல்லதோர் சமூகத்தினையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமையென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
நாடுமுழுவதும் உள்ள பெண் உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின் ஊடாக மகளிர் முன்னணியை வலுவூட்டுவதும் அதன் பங்களிப்பை கட்சிக்காக தொடர்ச்சியாக பெற்றுக்கொடுப்பது குறித்தும் தீர்க்கமாக இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டது.
இதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ச, திலங்க சுமதிபால, சாந்த பண்டார, ஆரியவதி கலபதி ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட செயற்பாட்டாளர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பின் பிரதான செயலாளர் சந்திரிகா டி சொய்சா, பிரதி தலைவர் சுமித்ரா பிரியங்கனி அபேவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின பெண் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
