
வைத்தியத் துறையின் பிரதான மூன்று சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் சுகாதார துறைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வைத்திய துறையின் குறித்த பிரதான மூன்று சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.
அந்தவகையில், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச ஹோமியோபதி வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் மேற்கத்தேய மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் இவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கும், புற்றுநோயாளிகளுக்கும் தரமற்ற மாத்திரைகள் வழங்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக வடக்கு கிழக்கில் வைத்தியர்கள் பல்வேறு போராட்டங்களை கடந்த வாரங்களில் முன்னெடுத்தனர்.
இதனிடையே, குறித்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக வைத்தியத் துறையின் பிரதான சங்கங்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
