யாழ்ப்பாணம், பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பலாலியில் படைத்தளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த காணிகள் இராணுவத்தினரால் சிரமதானம் செய்யப்படுவது வழமை. அதேபோன்று இன்றும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கல் ஒன்றை இராணுவத்தினர் அகற்ற முற்பட்டபோது, அங்கு காணப்பட்ட கண்ணிவெடி வெடித்தது. அதில் சிப்பாய் ஒருவர் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றாக சிதைவடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்த விசாரணையை பலாலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பலாலியில் கண்ணிவெடி வெடித்ததில் இராணுவத்தினர் படுகாயம்! (முதலாம் இணைப்பு)
பலாலியில் நிலக் கண்ணிவெடி வெடித்ததில் மூன்று இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
குறித்த கண்ணிவெடி யுத்தகாலத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





