மேஜர் பிரபாத் புலவத்தே மீண்டும் இராணுவத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமையால் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தலையீடுகள் குறித்து குற்றவியல் புலனாய்வு திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.
ரவி செனவிரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கொட்டேகொடவுக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் பிரபாத் புலத்வத்தே என்ற இந்த அதிகாரி, 2008ஆம் ஆண்டு ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை மற்றும் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கள நாளிதழொன்றின் தலைமை ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் ஆலோசனையின் பிரகாரம் அவர் மீண்டும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேஜர் பிரபாத் புலத்வத்தே தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு எந்த குறுக்கீடும் இருக்க முடியாது என்று கடந்த வாரம் இராணுவத் தளபதி உறுதியளித்தார்.
இருப்பினும், மேஜர் பிரபாத் புலத்வத்தே இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பெரும்பாலும் பாதிக்கப்படும் என்று சி.ஐ.டி. கவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு கடந்த வாரமும் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





