
சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் உளவுத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்நிலையில், இதுவரை வன்முறைகளில் ஈடுபட்டதாக 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையோரையும் அவற்றை திட்டமிட்டவர்களையும் கைதுசெய்யும் பணியில் உளவுத் துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக கம்பஹா, மினுவங்கொடை பகுதிகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தாக்கிய விவகாரம் குறித்த சூத்திரதாரிகளை கைதுசெய்யும் பொறுப்பை உளவுத்துறையினர் ஏற்றுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களையடுத்து, வடமேல் மாகணத்தின் பாதுகாப்புக்காக தொடர்ந்து பொலிஸ் அதிரடிப்படையினரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் தற்போது நிலவும் அமைதியான சூழநிலையை அடுத்து அங்கு தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டுவந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
