
பிரதான சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹஷிமீன் மரபணு பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு தினங்களில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில், இது குறித்த அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் அலாவுதீன் அஹமட் முவாத் என்பவர் என மரபணு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் ஆச்சி மொஹமட் ஹஸ்துன் என்பவர் என மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஷங்ரிலா விருந்தகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் மற்றும் இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் ஆகியோரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் பொறுப்பில் உள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் மகளின் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
