அட்டை இருந்ததாக கூறப்பட்டமைக்கான சாத்தியங்கள் இல்லையென பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேதன் தெரிவித்துள்ளார்.
பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு பெற்றோர், சித்தங்கேணிச் சந்தியில், உள்ள உணவகத்தில் மோதகம் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
குறித்த மாணவன் அதனை உட்கொண்டபோது, அதற்குள் அட்டை இருந்துள்ளது. இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆசிரியையிடம் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆசிரியர் பெற்றோரிடம் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக பொது சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேதன், சங்கானை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.லதன் ஆகியோர் இணைந்து குறித்த உணவகத்தை சோதனை செய்தனர்.
எனினும் அங்கு சுகாதார விதி மீறப்பட்டமைக்கான சாத்தியங்கள் காணப்படவில்லை எனவும் மோதகத்தினுள் இருந்ததாகக் கூறப்படும் அட்டை நீரில் அவிந்தமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் சுகாதாரப் பரிசோதகர்கள் கூறினர்.
மேலும் இது தொடர்பாக தாங்கள் அதிக கரிசனை எடுத்துள்ளதோடு, இதன் உண்மைத் தன்மை தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, குடும்பப் பெண் ஒருவருக்கு வாழ்வாதாரம் வழங்கும் நோக்கத்துடன் அவரிடம் இருந்தே தினமும் மோதகம் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மாலை மேற்படி உணவகம் உட்பட சித்தங்கேணி மற்றும் சங்கானைப் பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பாக கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






