உள்நோக்கத்துடன் நாணயப் பரிவர்த்தனையில்ஈடுபடும் நாடுகளுக்கான கண்காணிப்புப் பட்டியலில் சிங்கப்பூரை அமெரிக்கா இணைத்துள்ளது.
சிங்கப்பூர் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கிட்டத்தட்ட 4.6 சதவீதம் மதிப்பிலான (குறைந்தது 23.45 பில்லியன் வெள்ளி) பணத்தை வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்காக பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சின் அறிக்கையை மேற்கோட்காட்டி புளூம்பர்க் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
உயர்வாக இருக்கும் தனது சேமிப்பு விகிதத்தைக் குறைத்து உள்நாட்டு கொள்வனவு நடவடிக்கையை அதிகப்படுத்த சிங்கப்பூர் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் பட்டியலில் சிங்கப்பூரைத் தவிர அயர்லாந்து, இத்தாலி, மலேசியா, வியட்னாம் ஆகிய நான்கு நாடுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பட்டியலில் ஏற்கனவே உள்ள நாடுகளாகும். அதேவேளை, இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.





