
மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. கூட்டணி கர்நாடகாவிலும் பெருவாரியாக தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க.வின் ஆட்சியை நிறுவும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வென்றுள்ளார். அத்துடன், வீரப்ப மொய்லி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் படுதோல்வியடைந்து அதிர்ச்சியளித்தனர்.
கர்நாடகாவில் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, ஆளும் காங்கிரஸ் – மதசார்பற்ற கூட்டணி அரசு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நீடிக்காது என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசி வந்தனர். இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு ஆட்சியமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், மேலும் சில உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து தெரிவிக்கின்றனர். இதனால் ஆளும் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
