கருத்துக்கணிப்புக்களின் படி பா.ஜ.க அதிக இடங்களை பெரும்பான்மையுடன் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸின் ஆதரவுடன் மாநில கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுப்பட்டு வருகின்றார்.இது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இடம்பெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், சமாஜ்வாட்டி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட 21 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.
குறித்த கூட்டத்தின் போது தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் ஏற்படும் அரசியல் மாற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும், ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும், குளறுபடி இருப்பதாக தெரியவந்தால் அந்த தொகுதிகளில் முழுமையாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி 21 கட்சிகள் சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.





