
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பிரித்தானிய ஈரானியர்கள் மீதான ஈரான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான மோசமான அணுகுமுறையைக் கருத்திற்கொண்டே வெளியுறவுத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு பயணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானிய ஈரானியர்கள் மோசமான முறையில் நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பலமுறை ஈரான் அரசாங்கத்துக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஈரான் அரசின் நடத்தை மோசமடைந்துள்ளதாகவும் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
வேறெந்த வழியும் இல்லாத காரணத்தாலேயே பிரித்தானிய ஈரானியர்களை ஈரானுக்குப் பயணிக்க வேண்டாமென அறிவித்துள்ளதாகவும் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ பணியாளராக பிரித்தானிய ஈரானியர் நஸானின் ஷகாரி ரெட்கிளிப் 2016 ஆம் ஆண்டு ஈரான் பயணித்தபோது கைது செய்யப்பட்டு ஈரான் அரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரானில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் பணிபுரிந்து கொண்டிருந்த ஈரானியரான அரஸ் அமீரிக்கு பிரித்தானியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பட்டது.
