ஈட்டோபிக்கோ பகுதியில் வாகனம் ஒன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு லோரன்ஸ் அவென்யூ மற்றும் ஸ்கார்லெட் வீதிச் சந்திப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு 8.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை ரொறன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
லோரன்ஸ் அவென்யூவில் மேற்கு நோக்கி இருவருடன் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று, வெளிச்சத்தில் நிறுத்தப்பட்ட வேளையில், அங்கே வந்த கருமைநிற வாகனம் ஒன்றிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வெளிச்சத்தில் நின்ற வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் ஏற்படவிலலை எனவும், மற்றையவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வாகனம் பின்னர் வெஸ்ட்வே மற்றும் றோயல் யோர்க் வீதிப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சாரதிக்கு சிறிய காயங்களுக்காக சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மற்றையவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சம்பவத்தை நேரில் கண்டோர் அல்லது ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்திருப்போர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.a