வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிமீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு காலம் தாழ்த்தாமல் மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் மகளிர் சங்கத் தலைவி கோகிலா ஹர்ஷனி குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், இந்த பிரச்சினைகளுக்குப் பின்னர் வைத்திய துறை பல கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “குருணாகல் வைத்தியசாலை விவகாரம் இன்று பல குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியர்கள் மீது உள்ள நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. வைத்தியர் ஷாபி மீது நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
தாயொருவர், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது கூடாதா என்பதை தீர்மானிக்கும் உரிமை வைத்தியர்களுக்கு கிடையாது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய சுகாதர அமைச்சர் ஒரு குழுவினை நியமித்துள்ளார். இந்த குழுவின் அறிக்கை எந்தளவுக்கு சுயாதீனமாக அமையும் என்று தெரியாது.
ஆனால், அனைத்து வைத்தியர்கள் மீதும் இன்று காணப்படுகின்ற சந்தேகப்பார்வை நீங்க வேண்டுமாயின் மக்களுக்கு உண்மைகள் ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.





