
தனியார் லொறிகள் தண்ணீர் உறிஞ்சுவதைத் தடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் கடும் கெடுபிடிகள் செய்வதாக தண்ணீர் லொறி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் காலவரயைற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
ஆனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி நிர்வாகம் உறுதியளித்ததால் தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லொறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. மக்களின் சிரமத்தை மனதில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லொறி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 15000 தண்ணீர் லொறிகள் சேவையில் உள்ளன. சென்னையில் மட்டும் 5500 தனியார் தண்ணீர் லொறிகள் உள்ளன. தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை குடிநீர் வாரிய ஒப்பந்த லொறிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. அதே நேரம் விடுதிகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.
அவர்களுக்கு தனியார் லொறிகளே பெரும்பாலும் தண்ணீர் அளித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தனியார் லொறிகளைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை வாங்கி மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், தனியார் லொறிகள் தண்ணீர் உறிஞ்சுவதைத் தடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தனியார் தண்ணீர் லொறி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
