இந்தியப் பிரதமராக நாளை (வியாழக்கிழமை) நரேந்திர மோடி மீண்டும் பதியேற்கவுள்ளார்.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் ஆனந்த் சர்மாவும் பங்கேற்கவுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமையவுள்ளது.
அந்தவகையில் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விழாவில் பங்கேற்க பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் உள்ள எதிர்க் கட்சிகளுக்கும் பா.ஜ.க.வினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளாத மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகம் மற்றும் டெல்லி முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





