தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் வாக்கு எண்ணிக்கையை 88 பார்வையாளர்கள் கண்காணிக்கவுள்ளனர்.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுக்களாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுக்களாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஒவ்வொரு சுற்று முடிந்தபன்னர் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் வரை ஆகும். தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்படும்.
வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.





