இதனிடையே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையும் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டார்.

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டில் பதவியேற்கும் போது பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஒருமுறை கூட பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது, பிரதமர் மோடி பேசுகையில், ” மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உங்களைச் சந்திக்க நேராக இங்கு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும். இந்த தேசத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவம் நடக்கப்போகிறது.
எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளோம். நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் வாக்குறுதிகளே அவை. புதிய அரசு பதவியேற்றவுடன் அடுத்தடுத்த முடிவுகளை நாங்கள் எடுப்போம். இந்தியா தனது பன்முகத்தன்மையாலும், ஜனநாயகத்தாலும் உலகையே வியக்கவைத்துள்ளது ” என்று தெரிவித்தார்.
அதன்பின்னர் அமித் ஷா கூறுகையில், ” பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி 300 இடங்களைக் கைப்பற்றும். மோடியை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன்.
திறமை, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றால் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மீண்டும் 2ஆவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. எங்கள் திட்டங்களை, நோக்கங்களை ஏற்கும் எந்த புதிய கட்சியும் எங்களுடைய கூட்டணிக்குள் வரலாம். அதை வரவேற்கிறோம்” என்ற தெரிவித்தார்.
