
அத்துடன் இது தனது கனவுத் திட்டம் எனவும், தனிப்பட்ட முறையில் பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அடுத்த சில நாட்களில் பதவியேற்க உள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். பா.ம.க.வின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமான கோரிக்கை ஆகும்.
இந்தத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மை ஆகும்.
கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் 1970 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி ஆட்சியின் போதே நீர் மேலாண்மை வல்லுநர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் ஆகும். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு இப்போது செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
இது தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேளாண் தேவையை மட்டுமின்றி, குடிநீர் தேவையையும் நிறைவேற்றும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி பெற்று இத்திட்டத்தை செயற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்தத் திட்டம் காய்ந்த பூமியான தமிழகத்தை பசுமை பூமியாக மாற்றும்.
கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயற்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பா.ம.க.வும் நடவடிக்கை எடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது முதல் பணி கோதாவரி ஆற்றை கிருஷ்ணா ஆற்றுடன் இணைப்பது, கிருஷ்ணா ஆற்றை காவிரியுடன் இணைப்பது, அதன்மூலம் கோதாவரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழ்நாட்டின் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்வது என நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
