BY NILLANTHAN
பத்தாவது மே பதினெட்டு இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடும். ஜெனீவாவை எப்படி தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் மே பதினெட்டை நினைவுகூரும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நினைவு கூர்தலை யார் ஏற்பாடு செய்வது? எப்படிச் செய்வது? என்பவை தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அவ்வாறு ஒரு பொது உடன்பாடு எட்டப்படாமைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம்- நினைவுகூர்தல் என்றால் என்ன என்பது தொடர்பில் ஓர் ஒருமித்த கருத்து ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இல்லை. இரண்டாவது காரணம்- அவ்வாறு ஒருமித்த கருத்தைக் கொண்டிராத புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புக்களின் தலையீடு.
மே பதினெட்டை நினைவுகூர்வது என்பது இனப்படுகொலையை நினைவுகூர்வதுதான். ஓர் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக ஓர் இனத்தைக் கொத்தாகப் படுகொலை செய்த ஒரு யுத்தத்தின் முடிவுநாள் அது. எனவே அதை இனப்படுகொலை நாள் என்றும் அழைக்கலாம். அப்படிப் பார்த்தால் இனப்படுகொலையை நினைவு கூர்வது என்றால் என்ன? ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இனப்படுகொலையை நினைவு கூர்வது என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் தவிர்க்கவிடவியலாத ஒரு பகுதிதான். எனவே நினைவுகூர்தல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது எப்படி?
இனப்படுகொலை நூதனசாலை- ஆர்மீனியா
இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் போராட்டத்தை மூன்று தளங்களில் முன்னெடுக்க வேண்டும். அது ஒரு சட்டப் போராட்டம். அது ஒரு ராஜீயப் போராட்டம். அது ஒரு வெகுசனப் போராட்டம்.
அதை ஒரு சட்டப் போராட்டமாக முன்னெடுப்பதென்றால் அதற்கு வேண்டிய சட்டப் பெறுமதியுள்ள ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். தொகுக்க வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும். அதாவது இனப்படுகொலையை ஆகக்கூடிய பட்சம் விஞ்ஞான பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும். இது விடயத்தில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற மனித உரிமைகள் தகவல் ஆய்வு அமைப்பை (HRDAG)போன்ற அமைப்புக்களை ஈழத்தமிழர்கள் அணுகலாம். HRDAG ஏற்கெனவே இவ்விடயத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு யஸ்மின் சூக்காவோடு இணைந்து அந்த அமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தகவல்களைத் திரட்டத் தொடங்கி விட்டது.
தாயகத்தில் அரசியற் கட்சிகளும், சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் அவ்வாறு தகவல்களைத் திரட்டுவது என்பதையே ஓர் அரசியற் போராட்டமாக முன்னெடுக்கலாமென்று நான் பல தடவைகள் எழுதியிருக்கிறேன். அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சியானது தமிழ் மக்கள் மத்தியில் கிராம மட்ட வலைப்பின்னலை மிக வலிமையாகக் கட்டியெழுப்ப முடியும். இது முதலாவது.
இரண்டாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியை ராஜீய அரங்கில் பெற வேண்டும். அரசுகளின் நீதி எனப்படுவது இப்போதைக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் அரசற்ற தரப்புக்கள், அந்த அரசுகளை உருவாக்கும் வெகுசனங்கள் அரசுகளின் மீது செல்வாக்கைச் செலுத்தும் மத நிறுவனங்கள், ஊடகங்கள், கருத்துருவாக்கிகள் போன்றோர் மத்தியில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அபிப்பிராயம் கடந்த பத்தாண்டுகளில் ஓரளவிற்கு திரட்சியுற்றுள்ளது. இப்போராட்டப் பரப்பு அதிகபட்சம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கே உரியது. புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்களுக்கிடையில் ஒருங்கிணைப்பும் பொருத்தாமான பொது வேலைத்திட்டமும் பலமான ஒரு தலைமையும் உருவாகும் போது இப்போராட்டம் மேலும் தீவிரமடையும்.
இனப்படுகொலை நூதனசாலை -யூதர்கள்
இனப்படுகொலை நினைவுச் சின்னம் -கம்பூச்சியா
நடந்தது இனப்படுகொலைதான் என்பதை தமிழ் மக்களும் அவர்களுடைய நண்பர்களும் தான் கூறிவருகிறார்கள். உலக சமூகத்தில் அது இனப்படுகொலைதான் என்று ஏற்றுக்கொண்ட அரசுகள் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டின் மாநில அரசை தவிர உலகின் வேறு எந்த ஒரு மக்கள் மன்றமும் அதை இனப்படுகொலை என்று இன்றுவரையிலும் பிரகடனப்படுத்தி இருக்கவில்லை 1984இல் திருமதி இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை இனப்படுகொலையே என்று கூறி கனடாவில் உள்ள ஒன்டாரியோ சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கடிக்குள்ளாயின. ஒன்டாரியோ சட்டமன்றம் சீக்கியர்களுக்கு ஆதரவாக நிறைவேற்றியது போன்ற ஒரு தீர்மானத்தை ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் தமிழ்நாடு சட்டசபையும் நிறைவேற்றியது. ஆனால் அது தமிழ்ச் சட்ட மன்றம் ஒன்று நிறைவேற்றிய தீர்மானம்தான். அது போல ஒரு தீர்மானத்தை வட மாகாண சபையும் நிறைவேற்றியது
இவ்விரு இனப்படுகொலை தீர்மானங்களும் முக்கியத்துவம் உடையவை. இரண்டுமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்றங்கள். பெருந்தமிழ்ப் பரப்பில் உள்ள முக்கியத்துவம் மிக்க இரண்டு சட்டமன்றங்கள் அதை இனப்படுகொலை ஏன்று பிரகடனப்படுத்தியுள்ளன. அவை மக்கள் ஆணையைப் பெற்ற சட்டமன்றங்கள். எனவே அப்பிரகடனங்களுக்கும் மக்கள் ஆணை உண்டு உண்டு. அப்பிரகடனங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம்.இது விடயத்தில் இரண்டு தமிழ் சட்டமன்றங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு இருக்கக்கூடிய ஜனநாயக ரீதியிலான அங்கீகாரத்தை ஓர் அடித்தளமாக பயன்படுத்தலாம். இது இரண்டாவது.
மூன்றாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கான வெகுசனப் போராட்டங்கள். இப்போராட்டங்களை தாயகத்திற்குள்ளேயும், வெளியே தமிழகத்திலும், புலம்பெயர்ந்த பரப்பிலும், உலகம் முழுவதிலும் முன்னெடுக்க வேண்டும். முதலில் தாயகத்திற்குள் நடந்தது இனப்படுகொலையே என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு எதிரான நீதியைப் போராடிப் பெறத் தயாரான தலைவர்களையே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.
இரண்டாவதாக இனப்படுகொலையின் ஞாகபகங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எப்படிக் கடத்தலாம்? என்பது தொடர்பில் பொருத்தமான வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும். இதை தாயகத்திற்குள்ளும் வெளியே தமிழகத்திலும், தமிழ் புலம்பெயர்ந்த சமூகங்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை தமிழினப் படுகொலைதான். எனவே பெருந்தமிழ் பரப்பில் இது தொடர்பான ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி முதலில் உலகளாவிய தமிழ் சகோதரத்துவத்தையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். மூன்றாவதாக முழு உலகப்பரப்பிலும் இனப்படுகொலைகளுக்குள்ளான எல்லா மக்கள் கூட்டங்களோடும் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடும் எல்லாத் தரப்புக்களோடும் சகோதரத்துவத்தையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.
இவ்வாறு மேற்சொன்ன மூன்று வழிமுறைகளுக்குமூடாக ஈழத் தமிழர்கள் போராடலாம். இப்போராட்டத்தின் ஒரு பகுதியே நினைவு கூர்தலும் என்ற அடிப்படையில் சிந்தித்தால் தான் நினைவுகூர்தலை அதற்குரிய அரசியல் அடர்த்தியோடும் தீர்க்கதரிசனத்தோடும் அனுஷ்டிக்கலாம்.
பலரும் கருதுவது போல நினைவு கூர்தல் எனப்படுவது ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு கிராமத்திற்கு மட்டும் உரிய நிகழ்வுமல்ல, அது ஓர் இனத்திற்கு மட்டுமுரிய நிகழ்வுமல்ல. முள்ளிவாய்க்கால் எனப்படுவது 2009 மேக்குப்பின் ஒரு புவியியல் பதம் அல்ல. அது ஓர் அரசியல் பதம். அதை ஒரு கிராமத்தவர்கள் அல்லது ஒரு மாவட்டத்தவர்கள் அல்லது ஒரு பிரதேசசபை மட்டும் உரிமை கோர முடியாது.
இனப்படுகொலை நூதனசாலை- தென்னாபிரிக்கா
அதுமட்டுமல்ல இனப்படுகொலைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியே நினைவுகூர்தல் என்று விளங்கிக் கொண்டால் மே பதினெட்டில் மட்டுமா இனப்படுகொலை நடந்தது? இல்லை. ஆயுதப் போராட்டம் எனப்படுவதே இனப்படுகொலையின் விளைவுதான். இனப்படுகொலையானது அதன் விகாரமான உச்ச வளர்ச்சியைப் பெற்றதன் மூலம் அவ்வாயுதப் போராட்டத்தை தோற்கடித்தது. அதன் பின் எதிர்ப்பேதுமின்றி இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதைத்தான் கட்டமைப்புசார் இனப்படுகொலை என்று அழைக்கிறோம். 2009 மே பதினெட்டிற்குப் பின் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எல்லாத் திணைக்களங்களும் யுத்தத்தை வேறு வழிகளில் தொடர்கின்றன. நாவற்குழிச் சந்தியில் புகையிரத நிலையத்திற்கு அருகே கட்டியெழுப்பப்பட்டு வரும் புத்தவிகாரையில் வைத்துக்கட்டப்படும் ஒவ்வொரு செங்கல்லும் யுத்தத்தை வேறு வழிகளில்
தொடர்வதுதானா?
இனப்படுகொலை நூதனசாலை – றுவண்டா
ஆவணப்படுத்தல் எனப்படுவது முழுக்க முழுக்க விஞ்ஞானபூர்வமானது. அதே சமயம் நினைவுகளைத் தலைமுறைகள் தோறும் கடத்துவது என்பது அதிகபட்சம் உணர்ச்சிகரமானது. ஞாபகங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பது கூட்டுக்காயங்களோடு வாழ்வது அல்ல. கூட்டுக் குணமாக்கலுக்கு எதிரானதுமல்ல. அது காயங்களைத் திறப்பது, காயங்களை வாசிப்பது, காயங்களை எழுதுவது, காயங்களைப் பாடுவது. காயங்களை வரைவது. அதன் மூலம் அக்கூட்டுக் காயங்களுக்குக் காரணமாகவுள்ள அரசியலுக்கெதிராகப் போராடுவது. அப்போராட்டமே ஒரு கூட்டுக்குணமாக்கல் செய்முறையாக அமைய வேண்டும். நீதிக்கான ஒரு போராட்டமே கூட்டுக்குணமாக்கலுக்கு அவசியமான நம்பிக்கையை பற்றுறுதியைக் கட்டியெழுப்புகின்றது. நீதியின் மீது பசிதாகமுடைய ஒரு மக்கள் கூட்டமே கூட்டுக் காயங்களிலிருந்தும் தன் சொந்தச் சாம்பலிலிருந்தும் மீண்டெழுகிறது. எனவே ஞாபகங்களைக் கடத்துவது என்பது அடிப்படையில் உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமாகும்.
இது தொடர்பில் ஒரு கத்தோலிக்க மதகுரு யூத மரபிலிருந்து ஓர் உதாரணத்தை முன்வைத்தார். யூதர்கள் பாஸ்கா பண்டிகையை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த யூதர்கள் அங்கிருந்து வெளியேறிய “எக்சோடஸ்” என்று அழைக்கப்படும் மகா இடப்பெயர்வின் முதல் நாளில் புளிக்க வைக்கப்படாத அப்பத்தையும் இறைச்சியையும் கசப்புக் கீரையையும் உண்டதாக பைபிள் கூறுகின்றது. இம்மரபைப் பின்பற்றி ஒவ்வொரு பாஸ்கா பண்டிகையின் போதும் யூதக் குடும்பங்கள் அதே உணவை அருந்துவார்கள். அதன் போது குடும்பத்தில் மூத்தவர் மிக இளைய உறுப்பினருக்கு ஏன் இந்த உணவை அருந்துகிறோம் என்பதற்கு காரணத்தைக் கூறுவாராம். அங்கே தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்த ஞாபகங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன.
யூதர்களின் இந்த உதாரணத்தைப் பின்பற்றி ஈழத்தமிழர்களும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தலாம் என்று அம்மதகுரு எடுத்துக்காட்டினார். கடைசிக்கட்டப் போரின் கடைசி மூன்று மாதங்களில் உணவிற்குப் பஞ்சம் ஏற்பட்டது. உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்பட்ட நிவாரணப்பொதியும் இந்தியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதியும் உணவாகப் பயன்படுத்தப்பட்டன. அந்நாட்களில் கஞ்சிக்கொட்டில்கள் உருவாக்கப்பட்டன. ஆனந்தபுரம் சண்டைக்குப் பின் தேங்காய் கிடையாக்காப் பொருளாகியது. எனவே கஞ்சிக்கு தேங்காய்க்குப் பதிலாக இரண்டு அங்கர் பால்மா பக்கெட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன. அது ஒரு சுவையற்ற கஞ்சி. பெரிய அண்டாவில் நீரை நிறைத்து அரிசியைப் போட்டு அவிய விடுவார்கள். அரிசி அவிந்ததும் அங்கர் மாவைக் கரைத்து அதில் ஊற்றி கஞ்சி தயாரிக்கப்படும். கஞ்சிக் கொட்டில்களுக்கு முன் காலையிலிருந்தே மக்கள் வரிசையாக நிற்பார்கள். அந்த வரிசைக்குள்ளும் எறிகணை விழும். சனங்கள் சிதறி ஓடுவார்கள். எறிகணையின் புகை அடங்கியதும் இறந்தவர்களையும், காயப்பட்டவர்களையும் விலத்திக் கொண்டு கஞ்சிக்கான வரிசை நகரும். அப்படியொரு காலம்.
இக்கஞ்சியைப் போலவே வலைஞர் மடத்தில் ஒரு வடை தயாரிக்கப்பட்டது. இந்திய நிவாரணப் பொதிக்குள் கிடைத்த துவரம் பருப்பை அரைத்து செத்தல் மிளகாயைச் சேர்த்து சுடப்பட்ட வடை அது. அப்பொழுது வெங்காயம் அரிதாகவே கிடைத்தது. இதைப் போலவே முள்ளிவாய்க்காலில் ஒரு வாய்ப்பன் தயாரிக்கப்பட்டது. உலக உணவுத்திட்டத்தின் நிவாரணப் பொதிக்குள் வந்த வெள்ளை மாவையும், சீனியையும் கலந்து சுடப்பட்ட வாப்பன்கள் ஒன்று 100 ரூபாவிற்கு பூவரசம் இலைகளில் வைத்து விற்கப்பட்டது. ஓர் ஊழிக்காலத்தின் உணவுகள் அவை.
இந்த உணவுகளில் எதையாவது ஞாபகங்களைக் கடத்துவதற்கு ஈழத்தமிழர்கள் பயன்படுத்தலாம். மேற்சொன்ன மதகுருவின் ஆலோசனையின் பிரகாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சிக் கொட்டில்களை குறியீடாக உருவாக்கி சுவையற்ற கஞ்சியை பருகலாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாட் சமையலில் அக்கஞ்சியை அல்லது வாப்பனை அல்லது வடையை இணைத்துக் கொள்ளலாம். தமிழ் பரப்பில் இனப்படுகொலையை நினைவுகூர விரும்பும் எவரும் ஒரு குறியீடாக ஒரு குறித்த தினத்தில் அக்குறிப்பிட்ட உணவை அருந்தலாம்.
கஞ்சிக் கொட்டில்
ஈழத்தமிர்கள் ஓர் அரசற்ற தரப்பு. எனவே நினைவிடங்களை வடிவமைப்பதிலும் நினைவு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதிலும் அவர்களுக்கு வரையறை உண்டு. நினைவு வாரங்களை அல்லது மாதங்களை எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஒரு பொருத்தமான படைப்புத் திறன்மிக்க நிகழ்ச்சி நிரல் எதுவும் இதுவரையிலும் உருவாக்கப்படவில்லை. அறிவியல் அரங்குகள், நினைவுப் பேருரைகள், கருத்தரங்குகள், இசை அஞ்சலிகள், ஓவியங்கள், இனப்படுகொலை நினைவுப் பாடல்கள், அவைக்காற்றுதல்கள் போன்றவற்றின் மூலம் நினைவுகளைப் பேணும் கடத்தும் படைப்புத்திறன்மிக்க வழிமுறைகளைக் குறித்து ஈழத்தமிர்கள் சிந்திக்க வேண்டும். இந்நிகழ்ச்சி நிரலைப் பெருந்தமிழ்ப் பரப்பிற்கும் விரிவுபடுத்த வேண்டும்.
அரசற்ற தரப்பாகிய ஈழத்தமிழர்கள் தென்னாபிரிக்கர்களைப் போல, யூதர்களைப் போல
ஆர்மீனியாவைப் போல றுவாண்டாவைப் போல விடுதலைப் பூங்காக்களையோ, இனப்படுகொலை நூதன சாலைகளையோ (Freedom Park, Genocide Muceum) இப்போதைக்கு கட்டியெழுப்ப முடியாது. பதிலாக டிஜிற்றல் நூதன சாலைகளை அவர்கள் உருவாக்கலாம். அதே சமயம் யூதர்களைப் போல ஒவ்வொரு குடும்பமும் உயிர்ப்பான விதத்தில் ஞாபகங்களைக் கடத்தலாம். பேணலாம். எல்லாவற்றிற்கும் முதலில் அக்கறையுடைய தரப்புக்கள் இது தொடர்பில் தங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒரு பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
விடுதலை பூங்கா -தென்னாபிரிக்கா
மே பதினெட்டை நினைவுகூர்வது என்பது ஒரு கிராமத்திற்கோ, ஒரு திகதிக்கும் மட்டுமே உரிய ஒரு நாள் நிகழ்வு அல்ல அது ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றும் ஓர் அரசியற் செயற்பாடு என்று நம்பும் தரப்புக்கள் நினைவுகூர்தலை ஏற்பாடு செய்யவதே அதிகம் பொருத்தமானது. அப்பொழுதுதான் நினைவுகூர்வதும் நினைவுகளைக் கடத்துவதும் சான்றுகளை ஆவணமாக்குவதும் அவற்றுக்கேயான ஒரு முழுமையான பார்வையோடு ஒரு முழுநிறைவான வரைபடத்துக்கு உட்பட்டு முன்னெடுக்கப்படும். இல்லையென்றால் போராட்டங்களை யார் தத்தெடுப்பது என்பது குறித்து தங்களுக்கிடையே மோதிக்கொள்ளும் தரப்புக்கள் அல்லது இந்தப் போராட்டத்தை நானே நடத்தினேன் இந்த கூட்டத்தை நானே ஒழுங்கு படுத்தினேன் இந்த அமைப்பை நானே உருவாக்கினேன் என்று உரிமை கோரத் துடிக்கும் தரப்புக்கள் யாவும் பிச்சுப் பிடுங்கும் ஒரு நிலத்துண்டாக முள்ளிவாய்க்கால் அமைந்துவிடும். ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவதற்கு பதிலாக அங்கு சிந்தப்படும் கண்ணீர் அந்த வறண்ட கடல் மணலில் வீணாக உறிஞ்சப்பட்டுவிடும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் உறிஞ்சப்பட்டதைப் போல.
FacebookTwitterGoogle+PinterestLinkedIn