சுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது.
நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ‘வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற ரயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது.
ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் ‘வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway station) தற்போது பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பெயரை சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் ரயில் பயணிகளின் டிக்கெட்டுகளில் முன்னர் சென்னை சென்ட்ரல் என இருந்த பெயர் மாற்றப்பட்டு, ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலும் Puratchi Thalaivar Dr MGR Central railway station என அச்சிடப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய ரயில் நிலையத்தின் முகப்பு வாயிலின் உச்சியில் உள்ள பெயர் பலகை, ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் உள்ள அறிவிப்பு பலகைகள் யாவும் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கணிப்பொறியில் காணக்கிடைக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பிடியாவிலும் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில் உள்ள பெட்டிகளில் வைக்கப்படும் தகடுகளிலும் பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இடவசதி கருதி ரயில்களில் உள்ள பெட்டிகளில் ‘எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல்’ என மட்டும் குறிப்பிடுமாறு ரயில்வே துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தற்போது சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு கிடைத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.





