லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று புதன்கிழமை திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக, கோபிச்செட்டிப்பாளையம் அருகே அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் – பிரியா என்ற தம்பதி, தங்கள் பத்து மாதக் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என அமைச்சரிடம் கொடுத்தனர். குழந்தையை கையில் வாங்கிய செங்கோட்டையன், அதற்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழந்தையின் பெற்றோர், ‘இது ஆண் குழந்தை’ என்று அமைச்சரிடம் கூறினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவர், சிரித்தபடியே குழந்தைக்கு ‘ராமச்சந்திரன்’ என்று பெயர் சூட்டினார்.
குழந்தை, ஆணா? பெண்ணா..? என்று அறியாமல் அமைச்சர் பெயர் சூட்டிய சம்பவம், கூடியிருந்த மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
