கடந்த 1994ஆம் ஆண்டு 100 நாட்களில் 800,000 துஸ்தி இனத்தவர்கள், ஹுட்டு இனத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
உலக வரலாற்றில் கறைடிந்த சம்பவமாக பதிவாகியுள்ள இக்கோரச் சம்பவத்தின் 25ஆவது ஆண்டு நினைவுதினம் ருவாண்டா ஜனாதிபதி போல் ககமே தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
தனது மனைவி மற்றும் மகன் சகிதம் இந்த நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட ருவாண்டா ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவுதின நிகழ்வில் ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர், பெல்ஜியத்தின் பிரதமர் சார்ள்ஸ் மைக்கேல் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சுமார் 250,000 பேர் புதைக்கப்பட்டுள்ள கிசோஸி நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில், பிரமுகர்கள் இணைந்து பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமார் 2000 பேரின் பங்குபற்றுதலுடன் நினைவு நடைபயணமொன்றும் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்திலிலிருந்து தேசிய கால்பந்து திடல்வரை இந்த நடைபவனி இடம்பெறவுள்ளதோடு, இன்றிரவு அங்கு மெழுகுவரத்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
ருவாண்டாவில் துஸ்தி இனத்தவர்கள் சிறுபான்மையாக வாழ்ந்தாலும், அவர்களே பலம் மிக்கவர்களாக காணப்பட்டனர். இந்நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு ஹுட்டு இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி ஹப்யாரிமான சென்ற விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதனையடுத்து துஸ்தி இனத்தவர்களை வெறிகொண்டு அழித்த ஹுட்டு இனத்தவர்கள், 100 நாட்களில் 8 இலட்சம் பேரை கொன்றுகுவித்தனர்.
இச்செயற்பாட்டை நிறுத்த உலக நாடுகள் முன்வரவில்லையென்ற குற்றச்சாட்டு இன்றும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இக்கொலைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது