ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க தவறினால், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) ஐ.நா சபையில் நடைபெறும் நிலையில், மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் 40ஆவது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், இந்தியா கையளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. அந்தவகையில், பாகிஸ்தானில் வசித்துவரும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தி வருகின்றது.
எனினும், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





