பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு முழுவதும் ஒரே குரலில் பேச வேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என இவர்கள் கேட்கிறார்கள். இது பாகிஸ்தானுக்கு வசதியாக போய் விடுகிறது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.
பாகிஸ்தானுக்கு ஏற்ற குரலில் இங்குள்ள எதிர்க்கட்சியினர் பேசுவதால் இவர்களின் கருத்தை கேடயமாக பயன்படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்னும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.
முஸ்லிம் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பிலும் அவர்கள் ஈடுபடுகிறனர். ஆனால், எங்கள் ஆட்சியில்தான் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்றது பெருமைக்குரிய விஷயமாகும்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஊழலையும் ஏழ்மையையும் ஒழிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டு வரும் என்னை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நாட்டின் காவல்காரனான என்னை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் போட்டாப்போட்டி நிலவுகிறது. ஆனால், இவர்களை மீண்டுமொரு முறை தண்டித்து, சரியான பாடம் கற்பிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்“ என தெரிவித்துள்ளார்.
