ரொறன்ரோ லைட்டன் பார்க் குடியிருப்பு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்ளென்சைர்ன் அவென்யூ விற்கு தெற்கே, அவனியூ வீதியில் அமைந்துள்ள பெட்ரோ கனடா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ஒருவரை, முகத்தை மூடியவாறு, கறுப்பு நிற உடையுடன் அணுகிய துப்பாக்கிதாரி, அவர் மீது பல தடவைகள் சுட்டுக் காயப்படுத்திவிட்டு, அங்கிருந்து கருமை நிறமான SUV ரக வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
அத்துடன் சம்பவ இடத்தில் வெள்ளை நிற ஜீப் ஒன்று முன்னே இரண்டு பக்க யன்னல் கண்ணாடிகளும் சிதறிய நிலையில் காணப்படுவதாகவும், சம்பவ இடத்தில் பெருமளவு வெற்றுத் தோட்டாக்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதிலிருந்து ஏதாவது ஆதாரங்கள் கிடைத்ததா என்ற தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





