வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்குவில் கிராமத்தில் வசிக்கும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு கொக்குவில் பொதுக் கட்டடத்தில் இன்று நடைபெற்றது.வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொக்குவில் கிராமத்தில் வசிக்கும் 94 குடும்பங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் இருபத்தி நான்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் காட்லி கல்லூரியில் 1979ம் ஆண்டு உயர்தர கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அவர்களோடு ஒன்றாக கல்வி கற்று மரணித்தவர்களின் நினைவாக வறிய மாணவர்களுக்கு இவ்உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இக்கிராமத்து மாணவர்கள் நீண்ட தூரமாக உள்ள மாங்கேணி மற்றும் பனிச்சங்கேணி பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதால் போக்குவரத்து பிரச்சனைகளை எதிர் கொண்ட நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அன்டன், லண்டனின் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் எஸ்.சர்வேஸ்வரன், பொறியியலாளர் எஸ்.கென்றி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











