
“அவரே ஞானத்தைப் படைத்தவர், அதைக் கண்டு கணக்கிட்டவர், தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனாலே நிரப்பியவர்.
தம் ஈகைக்கேற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார். தம் மீது அன்பு கூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.
ஆண்டவரிம் கொள்ளும் அச்சமே மாட்சியும், பெருமையுமாகும். அதுவே மகிழ்ச்சியையும், அக்களிப்பையும், நீடிய ஆயுளையும் வழங்குகின்றது. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது| ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்குரியதாய் அமையும். அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள். ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம். அது இறைப் பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றில் இருக்கும்போதே அருளப்படுகின்றது. ஞானம் மனிதரின் மத்தியில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது. அவர்களது வழி மரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும்.”
ஞானம் என்னும் கொடையானது தாய் வயிற்றில் இருக்கின்போதே அருளப்படுகின்றது. தன் தாய் மூதாட்டி வயிற்றிலே ஆறு மாத காலமான யோவான் சிசுவாக இருந்தபோது, அங்கு விரைந்து வந்த மரியாளின் வாழ்த்துரைகளைக் கேட்டபோது அக் குழந்தை அந்த வாழ்த்தை அடையாளம் கண்டு மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறது. அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கின்றபோது அவளது தமையன் கிருஷ்ணன் அவள் துயிலும்போது சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைவது பற்றி உபதேசிக்கிறான். ஆனால் அதை உடைத்துக் கொண்டு வெளிவருவது பற்றி சொல்லுமுன்னே அந்த இடத்தை விட்டுப் போய் விடுகின்றான். அர்ச்சுனனும், கண்ணனும் இல்லாத வேளை பார்த்து கௌரவர்கள் சக்கர வியூகம் அமைத்து போருக்கு அறை கூவல் விடுத்தபோது அதை எதிர் கொள்ளும் அறிவு அபிமன்யூக்கு மாத்திரம் இருந்தது. அவன் வெற்றியோடு உள்ளே நுழைந்த போரிட்டாலும் அதிலிருந்து வெளிவரும் அறிவு அவனிடமில்லாத காரணத்தினால் சூழ்ந்து வந்த எதிரிகளால் வீழ்த்தப்படுகின்றான். ஞானம் எங்கள் பிறப்புரிமையாக இறைவனால் வழங்கப்படுகின்றது. அதை இனங் கண்டு வளர்த்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
