“சொல்லாலும், செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்| அப்போது உங்களுக்கு ஆண்டவரின் ஆசீர் கிடைக்கும்.தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும்| தாயின் சாபம் அவற்றை வேரோடு பறித்து எறிந்து விடும்.
உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்| உங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமை தராது. தந்தை மதிக்கப்பட்டால் அது பிள்ளைகளுக்குப் பெருமை| தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை.”
ஒரு தந்தை எவ்வளவுதான் தீங்கானவனாக இருந்தாலும், உணவுக்காக பசியோடு அப்பம் கேட்கும் தன் பிள்ளைக்கு அதன் தந்தை பாம்பைக் கொடுக்க மாட்டான் என்று இயேசு தெளிவு படுத்துகின்றார். ஒரு தந்தைக்குரிய பரிவோடு இறைவன் நம்மைப் பார்க்கின்றார். எனவே நமக்குத் தேவையானதிலும் பார்க்கிலும் மேலதிகமாகவே அவர் எங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறார். ‘கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்று அவர் எடுத்துச் சொல்லுகின்றார். தேடல் நம் வாழ்வில் முக்கிய இடத்தை எடுக்கின்றது. தேடல்தான் நமக்குத் தேவையானதை நாம் கண்டடைய நமக்கு உதவியாக அமைகின்றது. அதே நேரம் நாம் இனங்கண்டு எமது தேவைகளை தந்தையாம் இறைவனிடம் கேட்டு நிற்கின்றபோது அவர் அதை நமக்கு வழங்குகிறார். இந்த தபசு காலத்தில் நம்மை, நமது இதயத்தைத் தட்டித் திறக்க நாம் முன்வரும்போது அதன் கதவுகள் வழியே நம்மை இனங் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு நமக்குத் தேவையானதை நம் தந்தையாம் இறைவனிடம் கேட்டுப் பெற பணிவுடன் நாம் முன்வரும்போது அது அவருக்குப் பெருமை சேர்க்கின்றது. தன் சொல்லைக் கேட்டு தன் மைந்தர் செயற்படுவது குறித்து அவர் மகிழ்ச்சியடையாமல் போவாரோ?
ஒன்பதாம் நிலை
இயேசு மூன்றாம் முறை தரையில் வீழ்கிறார் .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“விழுந்து நொந்து போன யாவரையும் ஆண்டவர் தாங்குகிறார், தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். “ஆண்டவரே, எல்லோருடைய கண்களும் நம்பிக்கையுடன் உம்மையே நோக்குகின்றன.”
(சங். 114 : 14, 15)
விழுவதென்பது வாழ்வில் விழுதல் மட்டுமல்ல, பாவத்தில் விழுதல் மட்டுமல்ல, மனிதப் பண்பில் விழுதலையும் அது காட்டும்.”
கடமைகளினின்றும் விழுதல், சொன்ன சொல்லினின்றும் விழுதல், பொறுப்புக்களினின்றும் விழுதல், பதவியிலிருந்தும், அந்தஸ்திலிருந்தும் விழுதல் என்பனவற்றையும் கூட அது குறிக்கும்.
மனதில் தோன்றும் களைப்பும், பணியில் தோன்றும் சலிப்பும், விழுமியங்களில் தோன்றும் அசிரத்தையும் இந்த விழுதலை எம்மில் உருவாக்கி விடும்.
காற்றாக அலையும் முகில்நீர் ஒடுங்கும்போது, பாரந்தாங்காது நிலத்தில் விழத்தான் செய்கிறது.
ஆனாலும் அதன் வீழ்ச்சியில் ஒரு மலர்ச்சி, ஒரு புதுமை, ஒரு குளிர்ச்சி ஏற்படுகிறது.
நமது வீழ்ச்சியும் மற்றவர்களுக்கு எழுச்சியாகும்போதுதான், அவ் வீழ்ச்சியிலே அர்த்தம் பிறக்கிறது.
கிறீஸ்துவின் வீழ்ச்சியும் அதைத்தான் செய்கிறது. உண்மையில் அது வீழ்ச்சியல்ல, ஒரு உயர்ச்சிக்கு ஆயத்தமாகத் தன்னை நிலம் மட்டும் தாழ்த்திக் கொள்கின்ற நிகழ்ச்சி அது.
சிந்திப்போம்:
என் கடமைகளில், பணிகளில் நான் தவறிவிடாமல் கவனத்தோடு நடக்க எனக்கு அவதானத்தைத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
மனதில் களைத்து, உணர்வில் சோர்ந்து நின்றாலும், மனிதப்பண்பை இழக்காமல் நான் வாழ வரம் ஈந்த இறைவா உமக்கு நன்றி!
முன்னணியில் திகழ்ந்தாலும் முதலிடம் வேண்டாமல், தலைவராய் மிளிர்ந்தாலும் தனியிடம் நாடாமல், உயர்வாய் வாழ்ந்தாலும் எளிமையைக் கைவிடாமல் நான் வாழ வரம் தந்த இறைவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்





