ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில், இவ்வாறான வன்முறைகளை ஒழிப்பதற்காக மத்திய அரசினால் 327.6 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய, அதன் ஒருகட்டமாக இந்த நிதி ஒன்ராறியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை ரொறன்ரோவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எல்லைப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தடுப்புத்துறையின் அமைச்சர் பில் பிளையர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் ஒன்ராறியோவுக்கு 65 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதில் 11 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் ரொறன்ரோவில் இவ்வாறான வன்முறைகளை சமூகமட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 7 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கும் மேலதிகமாகவே இந்த நிதி வழங்கப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது சமூகத்தினதும் எமது சிறுவர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதை விடவும் முக்கிய பொறுப்புகள் எவையும் அரசாங்கத்திற்கு இருக்க முடியாது எனவும், அந்த வகையிலேயே பெருமளவு நிதியினை வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் செலவிட முன்வந்துள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.






