துனிசியாவில் அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்து ஜனாதிபதி பேஜி சைட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டுள்ளார்.துனிசியாவில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பொலிஸார், அரச அதிகாரிகளை குறிவைத்து இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதம் தலைநகர் டுனிஸ் நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்ளடங்களாக 38 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களையடுத்து அந்நாட்டில் முதன்முறையாக 2015-ம் ஆண்டில் ‘எமர்ஜென்சி’ எனப்படும் அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து, உள்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் வேளைகளில் அடுத்தடுத்து அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்படுகிறது.
இந்த வகையில், கடந்த 6-1-2019 ஒருமாத காலத்துக்கு அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த காலக்கெடு இன்றுடன்(செவ்வாய்கிழமை) முடிவடைவதால் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.





