
மன்னார் மாவட்டத்தில் தேனீ வளர்ப்புச் சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருவதுடன் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகவும் தற்போது காணப்படுகிறது.
தேனீ வளர்ப்புக்கான திட்டத்தை மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் தேனீ வளர்ப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது. இதனை ஆராயும் பொருட்டு மன்னார், உயிலங்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (புதன்கிழமை) கூட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயத் திணைக்கள பயிர் பாதுகாப்பு மற்றும் தேனீ வளர்ப்பு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.லம்பேட் கலந்துகொண்டு பேசுகையில், “தற்பொழுது உலக நாடுகளில் தேனீ வளர்ப்புக்கு முக்கியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் தேனீ வளர்ப்புக்கு எமது திணைக்களம் முக்கிய கவனஞ்செலுத்தி வருகின்றது.
இதற்கமைய 2005இல் இருந்து 2018 வரைக்கும் தேனீ வளர்ப்புக்காக வருடந்தோறும் நூறு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தை இலவசமாகவும் மானிய அடிப்படையிலும் முன்னெடுத்து வருகின்றோம். மன்னார் மாவட்டத்தில் பாலம்பிட்டி, தட்டசனாமடு, கீரிச்சுட்டான் போன்ற இடங்களில் சங்கங்கங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
தேனீ வளர்ப்பானது எம்மில் சிலருக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கலாம். ஆனால் இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இலாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் அமைகின்றது” எனத் தெரிவித்தார்.
