“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(சனிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தினால் இருதய நோயாளர்களின் சத்திர சிகிச்சைக்கான பணத்தை ஈட்டிக்கொள்வதற்கு வசதியற்ற மக்களுக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையை கேந்திர நிலையமாக கொண்டு இயங்குகின்றது.
இலங்கையில் இருதய நோய்களை குறைப்பது இந்த நிதியத்தின் கொள்கையாவதுடன், இருதய நோய்க்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதனூடாக அதன் தரத்தை மேலோங்கச் செய்வது இதன் நோக்கமாகும்.
“இதயத்திற்கு இதயம்” நிதியம் தொடர்பிலான தகவல்களை இலகுவாக கண்டறிவதற்கு இந்த இணையத்தளம் உதவியாக அமைவதுடன், இந்த நிதியத்தின் ஊடாக இருதய நோயாளிகளுக்கு நிதியை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகளும் இந்த இணையத்தளத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய இணையத்தளத்தை திறந்துவைத்த ஜனாதிபதி, அதன்பின்னர் இடம்பெற்ற விழாவில் கருத்து தெரிவிக்கும்போது இலங்கை கலாசாரத்தினுள் காணக்கூடியதாக இருக்கும் தியாக மனப்பான்மையானது மேற்கத்திய செல்வந்த நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
அபிமானத்திற்குரிய வரலாற்றையும் கலாசாரத்தையும் அடிப்படையாக கொண்டு வலுப்பெற்ற மனிதாபிமான எண்ணங்களையும் குணாதிசயங்களையும் வேறு எந்த நாட்டினதும் கலாசாரத்தோடு ஒப்பிட முடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறான உன்னத சேவைகளுடன் இன, மத பேதமின்றி தியாக மனப்பான்மை கொண்ட அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.





