அமெரிக்கக் கடற்படைக்கு இலங்கையில் இராணுவத்தளம் அமைத்துக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) பிரதமருக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆசிய கடல் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைத் தளங்கள் ஏற்கனவே அமைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இலங்கையில் தளம் அமைக்கும் எண்ணமில்லை. அது அவர்களது இலக்குமல்ல.
அத்துடன், அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருவதால் அவர்களுக்கு இராணுவத்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அமெரிக்க கடற்படையினது நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையின் எல்லைப் பிரதேசங்களில் கடற்படை முகாம் அமைக்க அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
எனினும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் அனுமதியின்றி தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





