தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே இதுதொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, ஏனைய கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாது முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நிதியை வீண் விரயமாக்குவதற்கே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கத்துடன் இணையப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியதாகவும் எனினும், அந்த கட்சி அரசாங்கத்துடனேயே தற்போதும் இணைந்து காணப்படுவதாகவும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.





