பிரெக்ஸிற்றின் பின்னர் ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கு பிரித்தானியா தம்மை அணுகியுள்ளதாக ஐக்கிய அரபு ராச்சியத்தின் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஆனாலும் அத்தகைய உடன்படிக்கைகளை எட்டுவதற்கு பல வருடங்கள் ஆகக்கூடும் எனவும் டுபாயில் நடைபெறும் உலக அரசாங்க உச்சிமாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்புச்சபையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு பிரித்தானியா ஆர்வமாக உள்ளதாக உலக அரசாங்க உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரித்தானிய சர்வதேச வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், சவுதி அரேபியா, ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலில் அங்கத்துவ நாடுகளாக உள்ளன.
2017 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் இங்கிலாந்துக்கிடையிலான வணிகம் £17.5 பில்லியன் ஆக உள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டில் இருந்ததை விட 12.3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டளவில் இரு நாடுகளுக்குமிடையிலான வணிகம் £25 பில்லியனாக அதிகரிக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





