இந்தோனேசியாவில் குற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவில் தொலைபேசி திருடிய வழக்கில் பப்புவா பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணையின் போது சந்தேக நபர் குற்றத்தினை ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து மிரட்டினால் ஒப்புக்கொள்வார் என நினைத்த பொலிஸார், மலைப்பாம்பு ஒன்றினை சந்தேக நபரின் கழுத்தில் போட்டு சுற்றியுள்ளனர். இதனை காணொளியாகவும் எடுத்துள்ளனர். அந்த காணொளி இணையதளத்தில் வெளியாகி, கடும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நடவடிக்கையை பலரும் கண்டித்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு ஜெயவிஜயா தலைமை பொலிஸ் அதிகாரி டோனி ஆனந்த ஸ்வாதயா மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘விசாரணை செய்தவர்கள் சரியான முறையை பின்பற்றவில்லை. அவர்கள் பயன்படுத்திய பாம்பு விஷமற்றது. குற்றவாளியின் உடலில் காயம் ஏதும் ஏற்படுத்தவில்லை.
மேலும் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என கூறியுள்ளார்.





