LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 1, 2019

இணக்கம் முதலில் எமக்குள் தேவை!

நல்லிணக்கம் என்பதுவே இன்று எமது முக்கிய தேவை என்று பல தரப்பினராலும் இன்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. போர் கடந்து, பேரழிவை ஏற்படுத்திப் போன ஒரு மண்ணில் அது முக்கியம் என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.

ஆனால், போரில் தோற்றவர்கள் அல்லது வீழ்ந்தவர்கள் அல்லாமல் போரில் வென்ற அல்லது அப்படி நினைக்கின்ற தரப்பே அதற்கான குரலை முதலில் ஒலிக்க வேண்டும், அதுவே இணக்கத்துக்கு வழி செய்யும் என்று ஒரு வாதமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது. அதிலும் உண்மை உண்டு.

இங்குள்ள யதார்த்த நிலையில் போரில் வென்ற தரப்பிடம் இருந்து உண்மையான நல்லிணக்கத்துக்கான அழைப்பு வரவில்லை என்பதையும் இங்கு நாம் கூறித்தான் ஆகவேண்டும். ஆழ்ந்த கரிசனையுடன் அதற்கான அழைப்பு எதுவும் வரவில்லை. இதுவே இலங்கையின் எதிர்காலத்தின் தோல்விக்கான முக்கிய சமிக்ஞையும்கூட.

உண்மையில் இங்கு நான் பேச முன்படுவது அதற்காகக்கூட அல்ல. தோற்று வீழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, தாம் எழுந்து நிற்பதற்காகக்கூட அவர்கள் மத்தியிலும் ஆழமான நல்லிணக்கம் இங்கு தேவைப்படுகின்றது. தோற்று வீழ்ந்த நாம் எமக்குள் இணக்கம் இல்லாமல் தொடர்ந்தால் எமது நிலைமை மேலும் பேரழிவாகிவிடும்.

போரில் வென்ற தரப்பு நல்லிணக்கத்தை பற்றி சிந்திக்காமல், வெற்றி பெற்ற மிதப்பில் இதே பாணியை தொடரலாம், சிறுபான்மையை தொடர்ந்து ஆக்கிரமிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால், இலங்கை என்று ஒட்டுமொத்த நாடு என்ற அடிப்படையில் இந்த நிலைமை தொடர்ந்தால், இங்கு பெரும் வீழ்ச்சியே எதிர்காலத்தில் நடக்கப்போகின்றது என்பது பல ஆழமான ஆய்வாளர்களின் கருத்து.

அதேவேளை சிறுபான்மையினங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக போரில் தோற்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள்ளேயே அவர்கள் இணக்கம் இல்லாமல் இருப்பது மிக மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும்.

இங்கிருக்கும் தமிழ் கட்சிகளிடையே உண்மையான இணக்கப்பாடு எதுவும் கிடையாது. சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தமக்கிடையே பேசிக்கொள்வதில்லை என்ற அளவுக்கு அந்த நிலமை இருப்பதாக ஒரு மூத்த ஊடகவியலாளர் அண்மையில் கவலைப்பட்டார்.

அதுமாத்திரமன்றி, இப்படியான கட்சிகளின் போட்டிச் செயற்பாடுகள் பல நேரங்களில் தமிழர்களின் பொதுப் பிரச்சினையில் பாதகத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் பல முறைப்பாடுகள் வருகின்றன.

அண்மையில், கொக்கட்டிச்சோலை படுகொலையின் ஆண்டு நிறைவு நிகழ்வு நடந்தது. எமது செய்தியாளர்களின் தகவல்களின்படி, ஆரம்பத்தில் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்பட்ட மக்கள் சேர்ந்தே இந்த நிகழ்வைச் செய்து வந்துள்ளனர். பின்னர், போர்ச் செயற்பாடுகளால் அவை  தடைப்பட, பின்னர் தமிழரசுக்கட்சியினர் அதனை நடத்தி வந்துள்ளனர். இந்தத்தடவை, படுவான் பாலகனின் தகவல்களின்படி அந்த நிகழ்வு இரு நிகழ்வுகளாக நடந்துள்ளது.

வழமைபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேச நிர்வாகம் அதனை மாலையில் நடத்த, காலையில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியினரால் இன்னுமொரு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரின் குடும்பங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

கடந்து போன 31 வருடங்களில் இந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு கிடைத்தை நஸ்டஈடு என்பது மிகமிகக் குறைவு. ஆனால், இவர்கள் இப்போது கிட்டத்தட்ட இரண்டாக்கப்பட்டுவிட்டார்கள். இரண்டு கட்சிகளும் தனித்தனியாக நிகழ்வுகளை நடத்தியதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஆனால், ஒரு விடயம் மாத்திரம் உண்மை. இங்கு கட்சிகளுக்கு இடையிலான இணக்கமின்மை காரணமாக தமது இழப்புகளுக்காக போராட வேண்டிய மக்கள் கிட்டத்தட்ட இரண்டாக்கப்பட்டு விட்டார்கள்.

இனி இந்த மக்களுக்கு எதுவும் நடக்காதோ என்ற நிலைமைகூட ஓரளவு உருவாகிவிட்டது. 32 வருடமாக மறுமணம் செய்துகொள்ளாத பெண்கள் இனி செய்து கொள்ளப்போகிறார்களா? தந்தையை இழந்து, கடந்த 32 வருடங்களாக எந்த உதவிகளும் இல்லாது தவித்த, குறைந்தபட்சம் 32 வயதாகிவிட்ட பிள்ளைகளுக்கு இனி எது கிடைத்து, என்ன நடக்கப் போகிறது.

வெறுமனே நினைவு நிகழ்வுகளை மாத்திரம் நடத்தி, உணர்ச்சி வசமாக பேசிவிடுவதுடன் மாத்திரம் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. நாங்கள்தான் தொடர்ச்சியாக நினைவு நிகழ்வுகளை நடத்தினோம் என்று அந்தக் கட்சிகள் வேண்டுமானால், பெருமை பேசிக்கொள்ளலாம்.

நாங்கள் நினைவு நிகழ்வுகளுக்கோ, அல்லது மக்கள் போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதனையும்விட வேறு பல தேவைகள் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக இருந்து வருகிறது, அதனை கையாளுங்கள் என்பதுதான் எமது கோரிக்கை.

மாவீரர் தின அனுட்டானங்களின் போதும் நாம் கூறுவது அதைத்தான். இப்படிக் கூறுவதற்காக எம்மைத் “துரோகிகள்” என்று கூறித் திட்டுவதில் எந்தப் பயனும் கிடையாது. யார் எம்மை என்ன சொன்னாலும் நாம் மக்களுக்காக மாத்திரந்தான் பேச முடியும்.

சரி நாம் விடயத்துக்கு வருவோம். இந்த நிகழ்விலும் கட்சிகளின் மத்தியில் காணப்படும் இணக்கம் மக்களுக்கு பாதகமாக அமையும் நிலை ஏற்படுகின்றது.

இரு கட்சிகளை இங்கு உதாரணமாக காட்டினோமே ஒழிய, இந்த இரு கட்சிகளைத் தவிர ஏனையோர் உத்தமர்கள் என்று அர்த்தமில்லை.

இங்கு அரசியல் கட்சிகள் மத்தியில் மாத்திரந்தான் இந்த நிலைமை என்றும் இல்லை. அவ்வளவு ஏன், செய்தியாளர் மத்தியிலும் செய்தி நிறுவனங்களின் மத்தியிலும்கூட இந்த இணக்கப்பாடில்லாத நிலைமை காணப்படுகின்றது.

இன்று இந்த நாகரிக உலகில் ஒரு பத்திரிகையின் ஆசிரியரோ அல்லது செய்தியாளரோ கலந்துகொள்ளும் நிகழ்வு குறித்த செய்தி இன்னுமொரு நிறுவனத்தின் ஊடகத்தில் வருவதில்லை. அதனை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. மிகப்பெரும் நிறுவனங்களிலும் இந்த பக்குவமற்ற நிலைமை காணப்படுகின்றது. எல்லோரையும் கூறவில்லை. ஆனால், பரவலாக இந்த நிலை காணப்படுகின்றது.

இந்த இணக்கமின்மையை நாம் முதலில் எமக்குள் களைந்தாக வேண்டும். எமக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இணக்கமின்மை குறித்து நிறையப் பேசியாக வேண்டும். துணிச்சல் உள்ளவர்கள் செய்ய முன்வாருங்கள். நீங்கள் இப்படி இருப்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். அதுவே நமக்கு நன்மை. அதன் பின்னர் மற்றவரைப் பற்றிப் பேசுவோம்.

சீவகன் பூபாலரட்ணம்


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7