25 வருடங்களுக்கு முன்னர் குரேஷியாவில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியா பிரஜை ஒருவருக்கு சேர்பிய நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் சேர்பியாவின் போர்க்குற்ற விசாரணைக்குழு, சோரன் டாடிக் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறது.
1991 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி குரேஷியாவின் Škabrnja பகுதியில் சுமார் 30 பொதுமக்கள் உட்பட 43 பேரை படுகொலை செய்த சேர்பியாவின் ஒட்டுக்குழுத்தலைவராக அவர் செயற்பட்டிருந்தார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் தற்போது சிட்னியில் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் 59 வயதான சோரன் டாடிக் அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து கன்பராவிலுள்ள குரேஷிய தூதரகம் எந்த கருத்தும் வெளியிடவில்லை. சில ஊடகங்கள் இவரது வீட்டுக்கு சென்றபோது அவ்வாறான ஒரு பெயரில் அங்கு யாருமில்லை என்று தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய – குரேஷிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்த செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, “இப்படியான ஒரு பேரர்க்குற்றவாளியை அவுஸ்ரேலிய அரசு தொண்ணூறுகளில் எவ்வாறு இந்த நாட்டுக்குள் அனுமதித்தது என்பதை எண்ணும்போது அதிர்ச்சியாக உள்ளது.
இப்படிப்பட்ட நபர் இன்றைக்கும் எமது தெருவில் சாவகாசமாக நடமாடுகின்றார் என்று எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கின்றது” என கூறியுள்ளார்.





