மகாராஷ்ரா அரசாங்கத்தின் மாடு வழங்கும் திட்டத்தால், கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகியுள்ளன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனைச் சாவடி அருகே, வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதன்போது, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகைதந்து, வளர்ப்புக்காகவும் விற்பனைக்காகவும் மாடுகளை வாங்கிச் செல்வர்.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பசு, எருமை, கன்று என ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.
இதில், கன்றுக்குட்டி 2,000 முதல் 12 ஆயிரம் ரூபாய்க்கும், பசு மாடு 10 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ரூபாய்க்கும், எருமை மாடு 14 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ரா, கோவா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொண்டு, மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் கூறியதாவது “ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கேரளா மற்றும் மகாராஷ்ராவில், அரசின் மாடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, மானிய விலையில் மாடுகளை தேர்வு செய்தனர். இதனால், 3 கோடி ரூபாய் மதிப்புக்கு மாடுகள் விற்பனையாகின” என தெரிவித்தார்.





