உடன்பாடற்ற பிரெக்ஸிற்றே தற்போதைய சூழ்நிலையின் இயல்புநிலை எனவும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானோர் எதிர்த்தாலும் இதை தவிர்க்கமுடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.இந்தச் சூழ்நிலையை தவிர்க்க முடியும் என நாம் நம்பினாலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்காக எம்மை தயார்ப்படுத்த வேண்டியது அவசியமென பிரஸ்ஸல்ஸில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்களின் கூட்டம் ஒன்றில் பேசிய மைக்கேல் பார்னியர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கு தற்போது இரண்டு சாத்தியமான வழிகள் உள்ளன. முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துடன் வெளியேறுவது இரண்டாவது ஒப்பந்தம் எதுவுமின்றி வெளியேறுவது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான எதிர்கால உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பமான சூழ்நிலை அல்ல என்பதையும் மைக்கேல் பார்னியர் வலியுறுத்தினார்.





