பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே எமது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகச் செயற்படும் அனைவரையும் ஒன்றிணைப்பதே எமது நோக்கம். பொதுஜன பெரமுன முன்னணி எவருடனும் கூட்டணியமைத்துக் கொள்ளாமல் வெற்றிபெற முடியும்.
ஆனால் சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் தற்போது கூட்டணியமைத்துக் கொள்ளாவிடின் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமையும்.
இந்நிலையில், பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியமைத்து இடம்பெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வதாகவே தீர்மானிக்கப்பட்டது.
புதிய கூட்டணி தொடர்பில் ஆராயப்பட்டதே தவிர அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் இரு தரப்பில் இருந்தும் முன்னெடுக்கப்படவில்லை.
தற்காலத்தில் அவசியமாக ஒரு புதிய அரசியல் கூட்டணி தோற்றம் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.





